வாடிகன் சிட்டி (1-11-'13) - மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கம் போல, பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்தார். பிள்ளைகள், பேரன், பேத்திகளை வளர்ப்பதில் குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் முக்கிய பங்கு பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.
கூட்டத்தில் பெரும்பாலும், வயதான தம்பதிகள் தான் இருந்தனர். அவர்கள் போப் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. நான்கு வயது சிறுவன் திடீரென மேடையேறி, போப் நாற்காலியில் உட்கார்ந்தது தான் சலசலப்புக்கு காரணம். மேடையில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வியப்பு.
போப் கவனமும் இதில் திரும்பியது. அவர் மேடையில் திரும்பி பார்த்தார். ஒரு வாண்டு , தன் இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தார். அந்த சிறுவனோ சீரியசான மூடில் இருந்தான். அவரையே கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து, காலாட்டியபடி இருந்தான்.
போப் பேச்சை தொடர்ந்தார். அவர் பேச்சை விட, அவன் மீது தான் பலரின் கவனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் அவர் காலை பற்றிக்கொண்டான். அதையும் அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். அவன் பெயர் விவரம் தெரியவில்லை. போப் பேசிய பின், அவரை பார்த்து சற்று விலகி, சடசடவென மேடையில் இருந்து இறங்கி போய், தன் பெற்றோருடன் உட்கார்ந்து கொண்டான்.